நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள கல்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவிலை அடுத்த அச்சம்பட்டி, வடக்கு புதூர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை, வாழை, வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம், தென்னை, மா உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். விவசாய நிலங்களுக்கு வெகு அருகில் இராஜபாளையத்தை சேர்ந்த இன்பராஜ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போதும் இயந்திரங்களை கொண்டு குடையும் போதும், பவுடர் புகை போன்றவற்றால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்குவாரிக்கு வண்டிப் பாதை அமைக்க வருவாய்த்துறையினர் நில அளவையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
