வறட்சியை சமாளிக்க துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின், ஐந்தாவது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2024ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த இலக்கை அடைவது மிகவும் சவாலானது என்றாலும், அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு இருந்தால், எளிதில் அடைய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாட்டின் நீர்வள ஆதாரங்களாக உள்ள ஆறுகள், வற்றாத ஜீவநதிகளை இணைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, தட்டுபாடில்லாத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, ஜல் சக்தி என்ற பெயரில், நீர் ஆற்றல் துறை அமைச்சகம், புதியதாக ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வறட்சியை சமாளிக்க தேவையான வலுவான, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சொட்டுநீர்ப் பாசனத்தை இன்னும் கூடுதலான பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க, மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
பிரதம மந்திரியின் விவசாய நிதியளிப்பு திட்டம் உட்பட வேளாண் பெருமக்களுக்கான அரசின் அனைத்து திட்டங்களும், உரிய நேரத்தில் கொண்டுசேர்க்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
