மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரயில், பேருந்து மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டே நாட்களில் 54 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதால் மும்பை நகரன் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. நேற்று பகல் முழுவதும் மழை பெய்த நிலையில், விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
சயான், கிங் சர்க்கிள், கிழக்கு தாதர், மட்டுங்கா, செம்பூர், மலாட் ஆகிய இடங்களில் நான்கு அடி அளவுக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மும்பை நகர வீதிகள் ஆறுகள் போல காட்சியளிப்பதால், வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தண்டவாளங்கள் முழுவதும் மூழ்கி உள்ளதால், நலசோப்பரா, சயான், மட்டுங்கா ரயில் நிலையங்களில், ரயில்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் ரயில்களை இயக்குவது ஆபத்தானது என்பதால் புறநகர் ரயில்களின் சேவை நிறுத்தப்படுவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விமான சேவையைப் பொறுத்தமட்டில் ஓடுதளத்தில் நீர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும், சில விமானங்கள் தாமதமாக பயணிக்கும் என்றும் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுதளத்தை விட்டு வழுக்கிச் சென்றது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று மும்பை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பால்கர் மாவட்டம் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் தீவிரமானது முதல் அதி தீவிர கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் 16 ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானம் மும்பைக்குப் பதில் அகமதாபாத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்பிரிபடா என்ற இடத்தில் குடிசைகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
புனேயில் உள்ள சிங்கேட் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பேரிடர் மீட்புக் குழுவினர் நிகழ்விடத்தில் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
புனேவில் மூன்று தினங்களுக்கு சுவர் இடிந்ததில் 15 பேரும், மேலும் பல்வேறு காரணிகளால் 8 பேரும் உயிரிழந்தனர். கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.
