இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நரேந்திரமோடி மாலத்தீவு சென்றுள்ளார். அண்டைநாடுளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைப்படி, கடந்த முறை பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, தற்போது மாலத்தீவை தேர்வு செய்துள்ளார். மாலே (( male))விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலத்தீவு அதிபர் இப்ராகிமை சந்தித்து இருதரப்பு உறவு மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய நிஷான் இசுதீன் என்ற விருதை மோடிக்கு வழங்கி மாலத்தீவு அரசு கவுரவிக்க உள்ளது.
மாலத்தீவுக்காக கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று மாலத்தீவு கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன.
மாலத்தீவு பயணத்தை பிரதமர் மோடி தேர்வு செய்ததற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சோலியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த நவம்பர் மாதம் மோடி மாலத்தீவு சென்றிருந்தார்.
அதே போன்று பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவையே மாலத்தீவு அதிபர் இப்ராகிம் தேர்வு செய்திருந்தார். மாலத்தீவில் முன்பு அதிபராக இருந்த அப்துல்லா யாமின் சீனாவிடம் நெருக்கம் காட்டி வந்தார்.
இது இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக இருந்தது. ஆனால் தற்போதைய அதிபர் இப்ராகிம், சீனாவை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புவது மோடியின் பயணத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சீனாவிடம் இருந்து பெற்ற 300 கோடி டாலர் கடன் சுமையில் இருக்கும் மாலத்தீவுக்கு, 140 கோடி டாலர் நிதி உதவி வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
