இன்று மாணிக்கவாசகரின் குரு பூசை. இன்று நாம் மாணிக்கவாசகர் பாடிய எம்பாவாய் பற்றி அறிய உள்ளோம்.
திருவெம்பாவை, 900 ஆயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. “தமிழ் மந்திரம்” என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும் சில திருவிழாக் காலத்திலும் சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பாவாய்!” என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி இப்போது சயாமியரால் ” லோரி பாவாய்” என்று பாடப்படுகிறது.

மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவரது காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக இல்லை. மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பிற் பட்டவராக இருக்க வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது பொதுவான முடிவு. அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் புலமை பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பதன் வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியன் தென்னவன் பிரமராயர் என்னும் உயரிய விருதை அளித்துப் பெருமை படுத்தினான். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார்.
சிவனே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார் என்பது கதை. மார்கழி மாதத்தில் அவர் சிவனைக் குறித்துத் தீந்தமிழில் பாடிய திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் ஓதப்படுகின்றன.
திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.
திருவெம்பாவை என்ற சொல்லில் திரு – தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது. எம் – என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது. பாவை – வழிபாட்டிற்கு உகந்த உருவம். ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது. எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது. நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது. ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும். இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘எம் பாவாய்’ என்று அமைந்துள்ளது. ஏலோரெம்பாவாய் என்பதில் ஏலும் ஓரும் அசைகள்; பாவாய் – விளித்தல். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ‘பாவாய்’ என அழைக்கப்படுகின்றனர்.
மாணிக்கவாசகரின் திருவெம்பாவை,ஆண்டாளின் திருப்பாவை இரண்டின் பாடுபொருள் ஒன்றுதான், பாடப்படும் கடவுள்தான் வேறு. மாணிக்கவாசகர் காண்பிக்கும் பெண்கள்,சிவனைப் போற்றி நோன்பு நோற்கிறார்கள். கோதை நாச்சியாராகிய ஆண்டாளும் அவளது தோழியரும் கண்ணனை எண்ணிப் பாவை நோன்பு இருக்கிறார்கள். இந்த இரண்டும் ஏட்டிக்குப் போட்டியாய் பாடப்பட்டனவாக தோற்றம் அளிக்கின்றன.
இந்தப் பெண்கள் எல்லாரும் இளம் வயதினர். குறும்பும் வேடிக்கையுமாகப் பேசிச் சிரிக்கிற விளையாட்டுத் தோழிகள். ஆனால் கடவுள் பணி என்று வந்துவிட்டால், அனைவரும் தீவிரமாகி விடுகிறார்கள், ”நாளைக்குக் காலையில சீக்கிரமா எழுந்து குளிச்சுக் கோயிலுக்குப் போகணும்” என்று திட்டமிடுகிறார்கள். பாவை நோன்புக்காகச் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பட்டியல் போட்டுத் தயாராகிறார்கள்.
மறுநாள் காலை, சில பெண்கள் சொன்னபடி சீக்கிரம் எழுந்துவிட்டார்கள். மற்றவர்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவர்களை எழுப்பிப் பாவை நோன்புக்காக அழைத்துச் செல்வதுதான் திருவெம்பாவையின் முதல் பகுதி.
மாணிக்கவாசகர் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அது மார்கழி மாதம். திருவாதிரைக்கு இன்னும் பத்து நாட்கள்தான் எஞ்சி இருந்தன. அந்த ஊரில் இளமங்கையர்கள் விடியற் கருக்கலில் எழுந்து வீட்டைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் குளத்துக்கு நீராடச் செல்கிறார்கள். அந்த அழகான காட்சியை மாணிக்கவாசகர் பார்க்கிறார். உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்து ஓடியது. அந்த உவகை திரு எம்பாவைப் பாடல்களாக வடிவெடுத்தன.
முதல் எட்டுப் பாடல்களும் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாகச் சேர்ந்து குளிக்கச் செல்லும் காட்சி வருணிக்கப்படுகிறது. அடுத்து எல்லோரும் கூடி இறையருளைப் பாடுவதாக அமைந்துள்ளது.
