மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் மாலேவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டின் உயரிய விருதான நிஷான் இசுதீன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து கேரள மாநிலம் கொச்சிக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான படகு சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் மாலத்தீவு அதிபர் இப்ராகீம் முகமது சோலிஹ்-பிரதமர் மோடி ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும் தொழில் வர்த்தகம் தொடர்பான 5 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மோடி, இந்தியாவுக்கும் மாலத்தீவுக்குமான நட்பு வரலாற்றை விடவும் பழமையானது என்றார். பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த அவர், தீவிரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவித்தார்.
தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம் மோசமான தீவிரவாதம் என்ற பாகுபாடு இல்லை என்று வலியுறுத்திய அவர் அரசே தீவிரவாதத்தைத் தூண்டி விடுவது மிகப்பெரிய ஆபத்து என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் மாற்றம், தீவிரவாதம் போன்றவை சர்வதேச பிரச்சினைகளாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் இதற்காக பல கூட்டங்கள் நடைபெற்றதாக குறிப்பிட்டார்.
தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதே நமது காலத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்று குறிப்பிட்ட மோடி, அனைத்து நாடுகளும் தீவிரவாத்தை ஒடுக்க ஒன்று திரள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாலத்தீவு பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி இன்று காலை கொழும்பு செல்கிறார். இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கொழும்புவில் பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
