பெங்களூரில் IMA Jewels என்ற பெயரில் நகை சீட்டு மற்றும் நிதிநிறுவனம் நடத்தி பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து 2 ஆயிரம் கோடியை வசூலித்து மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் ஏழு இயக்குனர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து, ஏடிஜிபி ரேங்க் உடைய அதிகாரி எம்.ஏ. சலீம் தலைமையிலான பத்து பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு நியமனம் செய்யப்பட்டது. இந்தக் குழு அமைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே தலைமறைவாக இருந்த நிதிநிறுவனத்தின் ஏழு இயக்குனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வீடியோ மூலம் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மன்சூர் கானை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுளள்ளது. அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் தற்கொலை செய்துக் கொண்டாரா என்பதற்கான தகவலும் இல்லை. இதனிடையே இந்த மோசடி நிறுவனத்தில் எட்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்து பணத்தை இழந்த அப்துல் பாஷா என்பவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மாரடைப்பால் காலமானார்.
