பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.
இரண்டு நாள் கிர்கிஸ்தான் பயணம் முடித்து இந்தியா திரும்பும் பிரதமர் மோடியின் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். மோடி அரசு புதிதாக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது. இக்கூட்டத்தை பயனற்ற கூட்டம் என்று கூறி புறக்கணிக்கப் போவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்து விட்டார்.
காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இக்கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே நான்கு முறை நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடியின் முந்தைய அரசின் போது நடைபெற்றது. நாளை நடைபெற இருக்கும் 5வது கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் நிலை, வேளாண் சீரமைப்புகள், விவசாயிகளின் வருவாயை பெருக்குதல், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். தமிழகத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரியும், ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்தித்து 90 பக்க முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை முதலமைச்சர் வழங்க உள்ளதாகவும், மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
