நடிகர் சங்க தேர்தலில், பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நடிகர் விஷால் நேற்று மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி முறையாகவும் பாதுகாப்பாகவும் தேர்தல் நடத்த ஆவண செய்யப்படும் என ஆளுநர் கூறியதாக தெரிவித்தார்.
ஆனால், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை, மாவட்டப் பதிவாளர் நேற்று நிறுத்தி வைத்தார். நடிகர் சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து 61 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்டப் பதிவாளரின் உத்தரவைத் தொடர்ந்து தேர்தலுக்கான பணிகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்தார். இந்நிலையில், பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளனர். அவர்களுக்கு முற்பகல் 11 மணிக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.
