வளரும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பார்கள். ஆனால், அந்தப் பயிரை முளைக்கும்போதே கிள்ளி எறிந்துவிட்டால் எப்படி? ஆம், இன்றைய நிலையில் விஞ்ஞானம் எனும் பெயரில் குழந்தைகள் மத்தியில் கணினி வளர்ச்சி விஷத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் ‘நெட்’ மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விட, மனதைக் கெடுப்பனவற்றைத்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுள் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்று ஐந்து வயதுக் குழந்தைகூட மொபைலைத் தாறுமாறாகப் பயன்படுத்துகிறது. பெற்றோர்களே, இன்று குழந்தைகளுக்கு மொபைல் கொடுத்து விளையாட வைக்கிறார்கள். முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார வைத்தால் குழந்தைகள் பெற்றோர்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், இன்று மொபைலைக் கையில் கொடுத்தால்தான் குழந்தையின் தொந்தரவு பெற்றோர்களுக்குக் குறைகிறது. ஆகவே, குழந்தையின் கையில் மொபைலைக் கொடுத்து மகிழ்கிறார்கள் பெருவாரியான பெற்றோர்கள். அந்தக் குழந்தை மொபைலை அழுத்தும்போது நல்லதும் வரும், கெட்டதும் தெரியும். சிறுவயதிலேயே மொபைலைப் பயன்படுத்திய குழந்தைக்கு, தன் அடிப்படைத் தேவைகளில் ஒன்று மொபைல் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறது. இதனால், பள்ளி செல்லும்போதுகூட மொபைல் தேவைப்படும் சூழல் ஏற்படுகிறது. ஆகவே, குழந்தையின் பக்குவத்தின் அடிப்படையில்தான் அதற்கான பொருட்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதைவிடுத்துப் பத்து வயதில் ஒரு குழந்தை அழகாகக் கார் ஓட்டினாலும், அது சட்ட விதிமீறல் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
அதேபோல்தான் கணினி, மொபைல் போன்றவற்றில் உள்ள இணையதளப் பயன்பாட்டிலும் இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள்தான், அந்தப் பிள்ளைகள் வளரும்போதே தங்களுக்குத் தெரியாமலேயே அதளபாதாளத்தில் தள்ளி விடுகின்றனர்.
அன்றைய காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டு முதல் ஆடிப்பாடி, ஓடியாடி விளையாடும் விளையாட்டுகள் எனப் பலவகையான விளையாட்டுகளை விளையாடினார்கள். இதனால், உடலும் மனதும் ஆரோக்கியம் ஆனது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் நமக்குக் கிடைத்த சாபங்களில் ஒன்றுதான் கணினி விளையாட்டுகள். இன்டெர்நெட்டில் பலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள்தான் இந்தத் தலைமுறையின் லேட்டஸ்ட் டிரண்ட்.
குழந்தைகளுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் ஏன் வீடியோ கேம்ஸ் விளையாடும் பெற்றோர்களுக்கும் கூட எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும். ஆனாலும், தங்கள் பிரச்சனைகளை வீடியோ கேம்ஸ் விளையாடுவதன் மூலம் திசை திருப்பிக் கொள்வார்கள். வெற்றி முனையில் இருந்து தன்னைப் பொழுதுபோக்கு திசைக்குத் திருப்பிக் கொள்வார்கள். தங்கள் வாழ்வில் மோகன ராகத்தைவிட முராரி ராகத்தையே வரவழைத்துக் கொள்வார்கள். யாராவது இதுபற்றிக் கேட்டால், தன்னைப் பார்த்துக் கேட்காததுபோல் ஒன்றும் தெரியாத ஊமைபோல் நடந்து கொள்வார்கள். ‘செவிடன் காதில் சங்கு’ கதைதான் இது!
வாய்ப்புகளைத் தவிர்ப்பது, நல்ல வாய்ப்பு வந்தாலும் அதை ஏற்க முடியாமல் தவிப்பது, புதிய மனிதர்களை, புதிய உறவுகளைப் புறந்தள்ளுவது, புதிய பொறுப்புகள் கிடைத்தாலும், அதில் வெறுப்பைக் காட்டுவது போன்ற நிகழ்வுகள் இந்த ‘கேம்ஸ்’ நோயாளிகளால் நிகழும்.
குழந்தைகளும், வளர்கின்ற இளம் பருவத்தினரும் இந்த கேம்ஸ் விளையாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஒடியாடி விளையாடும் விளையாட்டுகளை பெரும்பாலான டாக்டர்கள் பரிந்துரைக்க முனைப்புக் காட்டுவதில்லை. காரணம், குழந்தைகள் ஆரோக்கியமாகி விடுவார்களோ, தங்கள் வருமானம் குறைந்துவிடுமோ என்கின்ற கவலைதான்! குழந்தைகளிடமும், சிறுவர்களிடமும் வீடியோ கேம்ஸ் பழக்கம் ஏற்படும்போது அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான நேரமின்மை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் உடம்பில் வளர்சிதை மாற்றம் பாதிக்கிறது. மேலும், தொடர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் மூளையில் ஏற்படும் ரசாயான மாற்றங்கள் அவர்களைப் பாதிக்கின்றன.
நமது நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத நிலையில் இப்போது குழந்தைகளுக்கும் ‘ஒபிலிடி’ எனப்படும் உடல்பருமன் நோய் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே பெற்றோர்களே! குழந்தைகளுக்குத் தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே வீடியோ கேம்ஸ் விளையாட அனுமதியுங்கள். அந்த ஒரு மணி நேரத்தைத் தாண்டி அவர்கள் ஓடிக்கொண்டு இருந்தால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சூனியத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது!
