சேர்வராயன் மலையில் உருவாகி பரமத்தி வேலூர் அருகே காவிரியுடன் கலக்கும் திருமணித்தாறு தன் பொலிவையும் செழுமையையும் படிப்படியாக இழந்து வருகிறது.
சேலம் மாநகரில் சட்டவிரோதமாகவும் விதிமுறைகளை பின்பற்றாமலும் இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் பல சாயக்கழிவுகளை திருமணிமுத்தாற்றில் திறந்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதும் அந்த நேரத்துக்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பதும் பின்னர் கண்டுகொள்ளாமல் விடுவதும் கூட வழக்கமாகவே உள்ளது.
இந்த நிலையில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமையன்று பெய்த கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத் துவங்கியது. ஆற்றில் எப்போது தண்ணீர் வரும் என கழுகுபோல் காத்திருந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் வழக்கம்போல் சாயக்கழிவுகளை திறந்துவிட்டுள்ளனர்.
கூடுதலாக குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர், ஒரு சில மருத்துவமனை நிர்வாகங்களால் வீசப்படும் மருத்துவக் கழிவுகள் என எல்லாம் சேர்ந்து மீண்டும் திருமணிமுத்தாறு நீர் கறுமை நிறத்தில் நுரைபொங்க ஓடுகிறது.
ஆற்றில் நீர்வருவதே அரிதாகி விட்ட இன்றைய சூழலில், அவ்வப்போது வரும் நீரும் இந்தக் கோலத்தில் வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகளை திறந்துவிடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும் என அவர்கள் அழுத்தமான கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேசமயம், இயற்கை வளங்கள் மீது தாக்குதல் நடத்தும் இதுபோன்ற நபர்கள், தங்களது சந்ததிகளும் சேர்த்தே இதனால் பாதிக்கப்படுவர் என்பதனை உணர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
