தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அண்டை மாநிலமான கேரளாவை போல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக நிலப்பரப்பில் எரிவாயு எடுக்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் எடுக்க முடியாது என்று கூறினார். மாநில அரசு தனது உரிமையை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது என்று கூறிய சண்முகம், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு இதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் விவசாயத்தை பாதிக்கும் இதுபோன்ற திட்டத்திற்கு இனியும் அனுமதி வழங்காது என்றும் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டில் மாநில அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் விளக்கம் அளித்தார். ஆனால் ஏதோ திட்டம் தொடங்கப்பட்டு விட்டது போல் மாய தோற்றத்தை ஏற்படுத்தி மாநில அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துவதாகவும் கூறிய சி.வி.சண்முகம் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான ஆய்வுக்கு அனுமதி வழங்கியது திமுக அரசு தான் என்று குற்றம்சாட்டினார்.
திமுக அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்தது அதிமுக அரசு தான் என்றும் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு திமுக அரசு அனுமதி கொடுத்த போது மத்திய அமைச்சராக இருந்தது தங்கள் தந்தை டி.ஆர்.பாலு தான் என்றும் டி.ஆர்.பி ராஜாவிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் சாடினார்.
அப்போது பேசிய ராஜா, திட்டம் தொடர்பான ஆய்வுக்கு தான் திமுக ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் திட்டற்கே அனுமதி அளித்தது போல் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் புகார் கூறினார். இடையில் குறுக்கிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதி அளித்ததே தவறு என்ற நிலையில், திட்டத்திற்கான ஒப்பந்தமும் போடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆய்வுக்கான உரிமம் மட்டுமே திமுக வழங்கியதாகவும் அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உரிமை கிடையாது என்றும் மத்திய அரசு தான் உரிமம் வழங்கும் எனவும் தெரிவித்தார். திட்டத்தின் ஆய்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் திமுக ஆட்சியில் போடப்பட்டதாகவும், திட்டம் துவங்குவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட சி.வி.சண்முகம், விவசாயிகளை பாதிக்கும் திட்டம் என்று தெரிந்தும் ஆய்வுக்கு அனுமதித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அதிமுக., திமுக., என யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறிய சண்முகம், திட்டத்திற்கு அதிமுக எந்த அனுமதியும் வழங்காத போது எதற்கு திமுக மனித சங்கலி போராட்டம் நடத்துகிறது என வினவினார்.
அதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின்., மாநில அரசு எதிர்த்தாலும் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டுவதாகவும், அதை கண்டிக்கவே மனித சங்கிலி போராட்டம் எனவும் விளக்கம அளித்தார். பின்னர் பேசிய சி.வி.சண்முகம், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் முதலமைச்சர் அனுமதி வழங்கமாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
