சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து பிபிசியில் வெளியாகி உள்ள செய்தியை ஹாலிவுட் நடிகர் லியொனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் லியொனார்டோ டிகாப்ரியோ. இவர் பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர், சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பற்றாக்குறை குறித்து பிபிசி செய்தி இணையதளத்தில் வெளியாகி உள்ள செய்தியை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தற்போதைய சென்னையின் பிரச்சனையை மழையால் மட்டுமே தீர்க்க முடியும். தண்ணீர் இல்லாத நகரில் முழுமையாக வற்றிப்போன கிணறு என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை தான் காப்ரியோ பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில், சென்னையில் நான்கு முக்கிய நீர் ஆதாரங்களும் முற்றிலும் வற்றியதால் தென் இந்திய நகரமான சென்னையில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகத் தீவிரமான தண்ணீர் தட்டுப்பாடு மிக அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக சென்னையில் உள்ள நிலையில் அங்கு வசிப்பவர்கள் தண்ணீருக்காக அரசின் டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் டிகாப்ரியோ பகிர்ந்துள்ள பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை மாற்று வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இயங்கி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மக்கள் மழைக்காக தொடர்ந்து வேண்டி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
