அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாகத் திட்டிப் பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இன்று தங்க தமிழ்ச்செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில் காலை சென்னையில் உள்ள தினகரன் வீட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இன்று நடந்தது அவசர ஆலோசனைக் கூட்டம் கிடையாது முன்னரே திட்டமிட்ட கூட்டம்தான். தங்க தமிழ்ச்செல்வன் முறையில்லாமல் பேசுவதாக கடந்த வாரம் நிர்வாகிகள் என்னிடம் புகார் அளித்திருந்தனர். அப்போதே, ஜூன் 25-ம் தேதி சென்னைக்கு வாருங்கள் பேசுவோம் என அவர்களிடம் கூறினேன். அப்படித் திட்டமிடப்பட்டதுதான் இந்தக் கூட்டம். தங்க தமிழ்ச்செல்வன் ஒரு ரேடியோவில் பேட்டியளித்திருந்தார். அந்த விஷயத்தை நிர்வாகிகள் என்னிடம் கூறினர். நானும் அவர் பேசியதை கேட்டுவிட்டு தமிழ்ச்செல்வனை நேரில் அழைத்துப் பேசினேன். ஏன் அப்படிப் பேசுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, `நான் அப்படி எதுவும் பேசவில்லை, கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டது’ எனக் கூறினார். கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால் மட்டும் பேசுங்கள் இல்லையேல் பேசாதீர்கள் எனக் கூறினேன். இனிமேல் எந்தப் பேட்டியில் எப்படிப் பேச வேண்டும் என்றும் அவருக்குச் சொல்லிக் கொடுத்தேன். இனி அதிகமாகப் பேட்டி அளிக்க வேண்டாம் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால், அதைக் கேட்காமல் அவர் மீண்டும் தொலைக்காட்சி பேட்டியில் கடுமையாகப் பேசியுள்ளார்.

கட்சியின் துணைத் தலைவர், செயலாளர் பதவிகள் மாற்றப்படவுள்ளது. தலைவர் பதவி மட்டும் காலியாக வைத்துள்ளோம். அதை தவிர மற்ற நிர்வாகிகள் யார் என்ற அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடவுள்ளோம். அது பற்றி சின்னம்மாவிடம் பேசுவதற்காக சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா சென்றிருந்தோம். அப்போதும் தங்க தமிழ்ச்செல்வனைப் பற்றி பிற நிர்வாகிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர். நான் அவர்களிடம், ‘கட்சி நிர்வாகிகள் மாற்றப்படவுள்ளனர். தமிழ்ச்செல்வன் வேறு எதையோ மனதில் வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறார். அவர் வெளியில் செல்வதென்றால் செல்லட்டும். நாம் நீக்கம் எதுவும் செய்ய வேண்டாம். விரைவில் அறிவிக்கவுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரின் பெயரை எடுத்துவிடுவோம். அப்படி அறிவித்தாலே தமிழ்ச்செல்வன் நீக்கப்பட்டதாக ஆகிவிடும். முதன்முதலாக எந்த நீக்கல் செயலும் செய்ய வேண்டாம்” எனக் கூறினேன்.
நிர்வாகிகள் அறிவிக்கும் முன் நீக்கம் அறிவிப்பு வேண்டாம் என இருந்தோம் அவ்வளவுதான். தன்னை மக்களவை வேட்பாளராக அறிவித்ததற்குக் குறை கூறியுள்ளார். வேட்பாளர் அறிவிக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது குறை கூறுகிறார். அப்போதே சொல்லியிருக்கலாமே. அவர் என்னிடம் நேராக எதையும் பேசமாட்டார். ஆனால் தொலைக்காட்சி, கட்சி நிர்வாகிகள் என அனைவரிடமும் ஆவேசமாகப் பேசுவார். அவர் சுபாவமே அதுதான். தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார். இனிமேல் தங்க தமிழ்ச்செல்வனிடம் விளக்கம் கேட்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர் மனதில் எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறார் என அனைவருக்கும் தெரியும். அவர் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். அது யார் என விரைவில் நீங்கள் அனைவரும் பார்க்கப் போகிறீர்கள். விரைவில் அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார்” எனப் பேசினார்.
