தங்கத்தமிழ்ச்செல்வன், இன்று காலை, மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தாம் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், யாரும் தம்மிடம் பேசவில்லை என்றார்.
உள் அரங்க சந்திப்புகளை வெளியில் சொல்லும் பண்பாடற்றவராக, டிடிவி தினகரன் இருப்பதாக, தங்கத்தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார். 18 எம்எல்ஏக்கள் இல்லை என்றால் தினகரன் இல்லை என்று குறிப்பிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன், அவர்கள் குடும்பங்கள் கஷ்டப்படுவது தினகரனுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்..
இதற்கிடையே, டிடிவி தினகரன் ரிங் மாஸ்டர் போல செயல்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 114ஆவது பிறந்தநாளையொட்டி, தியாகராயநகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தங்கத்தமிழ்ச்செல்வன் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்றால், அதுகுறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றார்.
