ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று தொடங்குவதை முன்னிட்டு, ஒடிசாவின் பூரி நகரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வைணவத் தலம் ஜெகந்நாதர் ஆலயம். இங்கு வீற்றிருக்கும் ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரா தேவி ஆகிய மூவரும் தனித்தனியாக ரதங்களில் ஏறி, பூரி நகரை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்.
பூரி ஜெகநாதர் திருவிழாவில், 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வார்கள்.
இத்திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட மூன்று தேர்களையும் ராணுவ வீரர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் ஆலயத்திற்கு
வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
இதேபோன்று அகமதாபாத்தில் உள்ள ஜெகந்நாதர் கோவிலிலும் இன்று ரதயாத்திரை நடைபெறுகிறது. இதையொட்டி அகமதாபாதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது மனைவி சோனலுடன் ஜகன்னாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர் தீப ஆராதனை செய்து, சாமி கும்பிட்டார். குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் திரளான பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே ஜகந்நாதரை வழிபட்டனர்.
