சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்களில் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பிய 4 பயணிகளை, சுங்க இலாகா அதிகாரி ஒருவர், சோதனை செய்யாமலேயே வெளியே அனுப்ப முயன்றதை கண்டுபிடித்தனர்.
நால்வரின் உடமைகளையும் சோதனையிட்ட வருவாய் புலனாய்வு அதிகாரிகள், 12 கிலோ 950 கிராம் எடைகொண்ட தங்கக் கட்டிகள், ரகசிய கேமரா பொருத்தப்பட்ட குட்டி விமானம், விலையுயர்ந்த கேமராக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
சுங்க இலாகா அதிகாரி உள்பட 5 பேரிடமும் விசாரணை நடத்தியதில், சென்னையில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ 200 கிராம் தங்க கட்டிகள் மற்றும் 24 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் மற்றும் இவர்களுக்கு உதவிய விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளர் ஜெயராமன் ஆகிய 5 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மொத்தமாக இந்த சோதனையில் 7 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கக் கட்டிகள், 23 லட்சம் மதிப்புள்ள ட்ரோன் குட்டி விமானம், கேமராக்கள் மற்றும் 24 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் சிலரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
