பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரம் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், இரு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக நிகழ்ச்சிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக பள்ளி மாணவ மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பேரூராட்சி அலுவலகம் அருகே பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சீன நாடுகளின் கொடிகளை கையில் ஏந்தியபடியும், இரு நாட்டுத் தலைவர்களை வரவேற்கும் வகையிலான வசனங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியபடியும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.
பேரூராட்சி அலுவலகம் தொடங்கி, பேருந்து நிலையம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை வழியாகச் சென்ற பேரணி மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தைச் சென்றடைந்தது. இந்திய- சீன உறவை பறைசாற்றும் வகையில், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை மாணவர்கள் நடந்து சென்றனர்.
