கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்ற குழப்பம் கட்சி தொண்டர்களுக்கு இருப்பதில் வியப்பில்லை, ஆனால் கட்சி தலைவர்களுக்கு வருவது தமிழக அரசியலில் விசித்திரமாக இருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள சூழலில் எந்த கூட்டணியில் இருந்தால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற தேர்தல் கணக்கில் எல்லா கட்சிகளும் மூம்மரமாக உள்ளன. திமுக பொருளாளரும் மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகன் மிகத்தெளிவாக திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 2 கட்சிகள் தொடர்கின்றன, ம தி மிகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தோழமை கட்சிகள்தான் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் குறுப்பிட்டார்.
கூட்டணி என்பது ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து அதற்கான உடன்பாட்டில் அதிகாரபூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று தனது அரசியல் அனுபவத்தில் கருத்தை சொன்னார். தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் துரைமுருகன். இதற்கு வைகோவுடன் ஏற்கனவே தி மு க விற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே காரணம்.
2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி மு கவிடம் பேச்சை தொடர்ந்த வைகோ, ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்தித்து அ தி மு க கூட்டணியை உறுதி செயத்தார். அந்த தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் வெற்றி பெற்றார். இப்படி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலையை மாற்றக்கூடியவர் என்பது வரலாறு. திமுக இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாக தெரியும் மேலும் கூட்டணி என்பது டெல்லி தலைமையிடம் தான் திமுக வைத்துள்ளது அதன் கிளை தலைவர்களை எப்போதும் கண்டு கொள்வதில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக என்ன சொல்கிறதோ அதை செய்யும். வி சி க மற்றும் ம தி மு க நிச்சயமாக தொகுதி பங்கீட்டில் பிரச்சனைகளை கிளப்பும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிக தொகுதிகளை கேட்காமல் இருக்கவே திமுக அரம்பித்துள்ள அரசியல் தந்திரம் இது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நாங்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள வேண்டும் அதற்கு உடன்பாடு என்றால் கூட்டணி என்ற ரீதியில் திமுக காய்களை தற்போது இருந்தே நகர்த்துகிறது என்பது தெளிவாகிறது. திமுகவிற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஸ்டாலினை முதல்வர் பதவியில் உட்கார வைக்காமல் ஓயமாட்டேன் என்கிறார் வைகோ.
இதே வைகோ தான், 1992 ஆம் ஆண்டு ஸ்டாலினை முன்னிலை படுத்தவே தன் மீது வீண் பழி சுமத்தி கலைஞர் திமுகவில் இருந்து நீக்கினார் என்று நேற்று வரை சொன்னவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தன் மானத்திற்காக வாழ்பவன் என்று கூறும் வைகோ தனது கட்சி கூட்டணியில் இருக்கா? இல்லையா? என்பதை திமுக தலைவர் சொல்லட்டும் என்பது வித்தியாசமாக இருக்கிறது.
கூட்டணியில் பிரச்சனை இல்லையென்றால் வைகோவும், திருமாவளவனும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுடனான உறவு இணக்கமாகவும், வலிமையாகவும் உள்ளது என்று ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் மாளிகை முன்பு ம தி மு க நடத்தும் போராட்டத்திற்கு தி மு க தலைவர் ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளார் என்றும், அதே போல வி சி க நடத்தும் தேசம் காப்போம் மாநாட்டில் தி மு க கலந்து கொள்கிறது என்றும் வைகோவும் திருமாவளவனும் திருப்திபட்டுக்கொன்டு ஊடங்களை அமைதியாக்கியுள்ளனர்.
வைகோ சந்தித்து விட்டு போன பின் ஊடகங்களுடன் பேசிய ஸ்டாலின் இரண்டு கட்சிகளும் தி மு க கூட்டணியில் தான் உள்ளனர் என தெரிவிக்கவில்லை. கூட்டணியின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டு விளம்பரம் தந்து பெருமை சேர்த்தீர்கள் என்று ஊடகங்கள் மீது பாய்ந்தாரே தவிர இதுவரை கூட்டணி குறித்து ஸ்டாலின் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியை அமைத்து திமு க வை ஆட்சிக்கு வராமல் செய்தவர் வைகோ என்ற எண்ணம் திமுக தலைமைக்கும் அதன் தொண்டர்களுக்கும் உண்டு. மேலும் அரை நூற்றாண்டுகாலம் அரசியலில் இருக்கும் வைகோ இதுவரை தேர்தல் நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவுகள் எல்லாம் அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த கூட்டணிக்கும் சமீப காலங்களில் தோல்வியை தந்துள்ளது என்பது உண்மை.
கடைசியாக, கிடைக்க கூடிய ஒரு தொகுதிக்காக 39 தொகுதிகளிலும் உழைக்க வேண்டுமா? என்ற தொண்டர்களின் கேள்வி தலைவர்களின் காதுகளில் விழுவதில்லை. அரசியல் தோழமை வேறு கூட்டணி வேறு என்று பகுத்துணர்ந்து நடக்கும் தலைவர்கள் இல்லாத அரசியலில், தலைவர்களின் வழியே தொண்டர்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள்.
