தென்னாப்பிரிக்கா அணி உடனான ஃபிரீடம் கோப்பைக் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதை அடுத்து ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ரோகித், மயங்க் ஜோடி அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக 14 ரன்னில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதை அடுத்து, மயங்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அரை சதம் கடந்த புஜாரா, ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவருடன் சேர்ந்து பொறுமையாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்கள் எடுத்திருந்த அவரையும் ரபாடா அவுட்டாக்கினார்.
