கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா, இப்ராகிம் என்ற ஷாஹின்ஷா, அக்ரம் சிந்தா, சதாம் உசேன், அபுபக்கர் ஆகியோரின் வீடுகளிலும் ஒரு அலுவலகத்திலும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தினர்.
தமிழகம், கேரளத்தில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க கருத்துகளை பரப்பியதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சோதனையைத் தொடர்ந்து முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகியோரை கைது செய்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களை கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அவர்களை 5 நாள் என்.ஐ.ஏ. காவலில் விசாரிக்க கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் முகமது அசாருதீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை அழைத்து வந்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கோவை குனியமுத்தூரில் உள்ள சினோஜ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் சினோஜ் வீட்டில் இருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி, 2 ஹார்டு டிஸ்குகள், 4 பென் டிரைவ்கள், சில ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள், சினோஜின் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரில் சேவைகளைப் பெற்றதாகவும், அசாருதீன் தனது கணினி ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை சினோஜிடம் இருப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அடிப்படையிலேயே, சினோஜின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகக் சொல்லப்படுகிறது.
சினோஜின் வீட்டைத் தொடர்ந்து கோவையில் வேறு சில இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
