கர்நாடக எம்.எல்.ஏக்கள் 8 பேரின் ராஜினாமா கடிதம், விதிமுறைப்படி இல்லை என்பதால் அதனை ஏற்க முடியாது என்று அந்த மாநில சபாநாயகர் கூறியுள்ளார். ராஜினாமா கடிதம் கொடுத்த அனைவரும் நேரில் விளக்கம் அளிக்குமாறு அவர் உத்தரவிட்டு உள்ளதால், குமாரசாமி அரசுக்கு மேலும் அவகாசம் கிடைத்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 3 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் என 15 பேர் ராஜினாமா செய்திருப்பதால் குமாரசாமி தலைமையிலான அரசு எப்போது வேண்டும் என்றாலும் கவிழலாம் என்ற நிலையில் ஊசலாடி வருகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்துவதற்காக அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் குமாரசாமியிடம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதங்களை ஏற்பது குறித்து விதிமுறைப்படி தான் முடிவு எடுக்க முடியும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். 5 எம்எல்ஏக்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதங்கள் தான் முறைப்படி இருப்பதாகவும், 8 எம்எல்ஏக்களின் கடிதங்கள் சட்ட விதிமுறைப்படி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர்கள் 8 பேரும் மீண்டும் ராஜினாமா கடிதங்களை அளிக்க வேண்டும் என்றும், ராஜினாமா செய்வது குறித்து 13 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். எம்எல்ஏக்கள் 13 பேரும் தனது முன்பு ஆஜராக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் சபாநாயகர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கட்சி விதிமுறைகளை மீறிய அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் பதவி விலகிய எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிற்கு, ஐஎம்ஏ நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு விசாரணைக்குழு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் தார்வாடில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக்களை பின்னணியில் இருந்து பாஜக இயக்குவதாக கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்று கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா விளக்கம் அளித்தார். கட்சி தலைமை மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள் பதவி விலகி இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. பாஜகவை குற்றம்சாட்டி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் குழப்பம் தொடர்ந்தால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, பின்னர் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது. பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி டெல்லியிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே, மும்பையில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் பத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முதலமைச்சர் குமாரசாமியோ, அமைச்சர் சிவக்குமாரோ தங்களை பார்க்க வரக்கூடாது என கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். குமாரசாமியும் சிவக்குமாரும் தங்கள் ஆட்களுடன் ஓட்டலுக்கு படையெடுக்க உள்ளதாகவும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.இதையடுத்து எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஆளுநர்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியைக் கவிழ்க்க மத்திய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டிவருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
