ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் அசபல் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், கேதன் சர்மா என்ற ராணுவ மேஜர் பலியானார். மேலும் ஒரு ராணுவ மேஜர் மற்றும் இரு வீரர்கள் படுகாயடைந்தனர்.
இதையடுத்து ராணுவத்தினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடியபோது, ஒரு வீட்டுக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வீட்டுக்குள் இருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனிடையே புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும் அப்பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 6 துணை ராணுவப் படை வீரர்களும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
