2017 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த ராகுல்காந்தி, மக்களவை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக கடந்த மே மாதம் 25 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை செயற்குழு நிராகரித்தது.
பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ராகுல்காந்தி நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடருமாறு வலியுறுத்தியதுடன், கட்சி தொண்டர்களும் பல இடங்களில் அதே கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கனவே தான் கடிதம் அளித்து விட்டதாக கூறினார். தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் தான் இல்லை என்று குறிப்பிட்ட ராகுல், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு உடனடியாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி வெளியிட்ட 4 பக்க கடிதத்தில், காங்கிரஸ் கட்சிக்காக சேவையாற்றுவது தனக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தலைவர் என்ற முறையில் தானே பொறுப்பேற்பதாக அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு பொறுப்புடைமை முக்கியம் என்பதால் தலைவர் பதவியில் இருக்கு விலகியதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கட்சியை மறுசீரமைப்பு செய்ய கடினமாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90 வயதான மோதிலால் வோரா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரான மோதிலால் வோரா, தற்போது மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.
சோனியாகாந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராக கருதப்படும் மோதிலால் வேரா, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
