ஒன்ப்ளஸ் ரெட் கேபிள் டூர் நடத்திய ஆர்வமும், துடிப்பும் மிக்க இளம் இசைக்கலைஞர்களை கண்டறியும் போட்டியின் இறுதிச் சுற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியின், ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பா ராவ் இசை அரங்கில் இன்று (13/10/19) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல நூறு பேர் ஆர்வமுடன் தங்களை பதிவு செய்து கொண்டனர். அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்குழுக்களின் முதல்கட்ட போட்டிகள் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பெட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றது. அங்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நான்கு பிரிவுகளைச் சேர்ந்த20 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதிச்சுற்றுப் போட்டியானது, நிரம்பி வழிந்த அரங்கம், உற்சாகமிக்க போட்டியாளர்கள், நுணுக்கமான – அனுபவமிக்க நடுவர்கள் என களைகட்டியது. பிரபல பாடகர்கள் விஜய் பிரகாஷ், சக்தி ஸ்ரீகோபாலன், இசையமைப்பாளர் சான் ரோல்டன் மற்றும் இளம் நடிகர் அமிதாஷ் ப்ரதான் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அரங்கில் குழுமியிருந்தவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் தமிழ் திரையிலகில் முத்திரை பதித்த பாடல்கள் சிலவற்றை நிகழ்ச்சியின் இறுதியில் பாடி அசத்தினார் சக்தி ஸ்ரீகோபாலன். ஒருதுளி உற்சாகமும் இறுதிவரை குறையாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான சையத்.
உண்மையான திறமையாளர்களை, அவர்கள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு மேடையேற்றும் விதத்தில் தான், மற்ற இசைப் போட்டிகளை விட ஒன்ப்ளஸ் ரெட் கேபிள் டூர் வித்தியாசப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராப் அண்ட் ஹிப் ஹாப், ராக் அண்ட் மெட்டல், லைட் மியூசிக் மற்றும் அகோஸ்டிக் – அக்கபெல்லா என நான்குவிதமான இசைப்பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது இதன் கூடுதல் சிறப்பு.
இதில் ராப் அண்ட் ஹிப் ஹாப் பிரிவில் இறுதிச்சுற்றுப் போட்டியில் டேவாய்ட், யுவராஜ் ஆன் தி ப்ளோர், அசல் கோளாறு, வோல்டேஜ் பி மற்றும் டகால்டி ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களில் யுவராஜ் ஆன் தி ப்ளோர் வின்னராகவும், ரன்னர் அப்-ஆக டேவாய்டும் வந்து அசத்தினார். இதேபோன்று ராக் அண்ட் மெட்டல் பிரிவில், சைசிஜி, ஜிகிர்தண்டா, பிக்சாம், போபியா டெய்மோஸ் மற்றும் மசால் வடை ஆகிய குழுக்கள் தங்கள் இசையால் மேடையை அதிரச் செய்தனர். இவர்களில் சைசிஜி வின்னராகவும், மசால் வடை ரன்னராகவும் பரிசுகளை தட்டிச் சென்றனர். லைட் மியூசிக் பிரிவில் கர்நாடிக், சியோநார், நறுமுகை, தீப்பெட்டி மற்றும் மெட்ராஸ் மியூசிக் பேக்டரி ஆகிய குழுவினர் திரைப்படங்களில் இருந்து சிறந்த மெல்லிசைப் பாடல்களை பாடி மெய்மறக்கச் செய்தனர். இவர்களில் வின்னர் பட்டத்தை கர்நாடிக் குழுவும், ரன்னர் அப் பட்டத்தை தீப்பெட்டிக் குழுவும் பிடித்து அசத்தினர். அகோஸ்டிக் அண்ட் அக்கபெல்லா பிரிவில், க்ரிஷ்னா, ப்ளர்புல், ஆர்கனைசடு கேயாஸ், நிதிகா மற்றும் ட்ராய் அண்ட் பர்பெக்ட் ஃபிப்த் ஆகியோர் இசைக்கருவிகள் இன்றி குரலால் அரங்கை கட்டிப் போட்டனர். இவர்களில் க்ரிஷ்னா மற்றும் கவுதம் வின்னராகவும், ஆர்கனைசடு கேயாஸ் ரன்னராகவும் வந்தனர். தங்கள் சாதனையை வெளிப்படுத்திய இவர்களுக்கு சர்வதேச இசைத் திருவிழாக்கள், தேசிய இசைவிழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
ஒன்ப்ளஸ் மொபைல் வகைகளில் புதிய வரவான 7T உலக சந்தையில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வை இணைத்து நடத்தப்பட்டது தான் ஒன்ப்ளஸ் ரெட் கேபிள் டூர். இவ்விழாவில் பேசிய ஒன்ப்ளஸ் தேசிய விளம்பர தலைவர் தர்ஷனா பாலகோபால், ‘ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் லட்சியமான “ஒருபோதும் ஓய்ந்து விடாதீர்கள்” என்ற வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாகவே இளம் இசைக்கலைஞர்களை கண்டறிந்து நாங்கள் மேடையேற்றி இருக்கிறோம். முதன்முறையாக சென்னையில் இவ்வளவு பெரிய பார்வையாளர்கள் முன்பாக உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒன்ப்ளஸ் ரெட் கேபிள் டூர் வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. ஆனால் எங்கள் லட்சிய வாசகத்தைப் போன்று நீங்கள் ஓய்ந்து விடாமல் உங்கள் கனவுகளைத் தேடிச் செல்லுங்கள். வெற்றியாளர்களும், போட்டியாளர்களும் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கான ஆதரவை ஒன்ப்ளஸ் எப்போதும் வழங்கும்’ என்றார்.
