இடதுகை கட்டைவிரல் முறிவு காரணமாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஷிகார் தவான் விலகியுள்ளார்.
உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் நாதன் கோல்ட்டர் நைல் வீசிய பந்து, ஷிகர் தவானின் இடது கை கட்டை விரலை பதம் பார்த்தது. வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடிய ஷிகர் தவான் 117 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். இதை அடுத்து கட்டை விரல் காயத்துக்கு சிகிச்சை பெற்றார்.
ஸ்கேன் செய்து பார்த்த போது கட்டை விரல் முறிந்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கட்டை விரல் குணமாக 3 வார காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார்.
எனவே நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் நியுசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷிகர் தவானுக்கு பதிலாக ஏற்கனவே இந்திய அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரோஹித் ஷர்மாவுடன் இனி இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
