இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பில் துபையைச் சேர்ந்த 5 பேருக்கு தொடர்பு இருந்ததாகக் கண்டறியப் பட்டு, அவர்கள் கைது செய்யப் பட்டனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்.21ம் தேதி உயிர்த்த ஞாயிறு என்ற ஈஸ்டர் தினத்தில், கிறிஸ்துவ சர்ச்சுகள், நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து இச்லாமிய பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல்களில் இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது கண்டறியப் பட்டது. இந்தக் கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் சுமார் 100 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. மேலும், வெளிநாடுகளில் இருந்தவாறு இந்த தாக்குதல்களுக்கு துணையாக இருந்த சிலரையும் இலங்கை போலீசார் தேடி வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் தடை செய்யப் பட்ட இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த முஹம்மது மில்ஹான் உள்ளிட்ட சிலர் தேடப் படும் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். இந்நிலையில், முஹம்மது மில்ஹான் உள்பட தேடப்படும் 5 பேரை இலங்கை போலீசார் துபாயில் கைது செய்து, இன்று காலை கொழும்புவுக்கு அழைத்து வந்துள்ளதாக, இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
