தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன.
சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரிக்கை எழுந்தது. சட்டப்பேரவையில் இதுகுறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ஆவடியை புதிய மாநகராட்சியாக அறிவித்து அவசரச் சட்டம் பிறப்பித்து, அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.
இதன்மூலம், தமிழ்நாட்டின், 15ஆவது மாநகராட்சியாக, ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் இடம் பெறும். நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், அயப்பாக்கம், வானகரம் உள்பட 11 கிராம ஊராட்சிகள் ஆவடி மாநகராட்சிக்குள் கொண்டுவரப்படும். இதில் 80 முதல் 100 வார்டுகள் வரை வரலாம்.
ஆவடி மாநகராட்சியாக மாறும் போது குடிநீர், கழிவு நீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படும். அதே நேரத்தில் சொத்து வரி, குடிநீர் வரி சற்று அதிகரிக்க கூடும். ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி ஆகியவை, ஆவடி மாநகராட்சிக்குள் வந்தால், 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை, சுமார் 12 லட்சமாக இருக்கும்.
மேலும், 11 கிராம ஊராட்சிகள், ஆவடி மாநகராட்சி எல்லைக்குள் கொண்டுவரப்பட இருப்பதால், மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.
வழக்கமாக ஒரு மாநகராட்சி அறிவிக்கப்படும் போது, சட்டப்பேரவையில், அதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது விவாதம் நடைபெற்று முடிந்தபின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம், அதுநிறைவேற்றப்படும். அதன்பின்னர், புதிய மாநகராட்சிக்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்படும். ஆனால், ஆவடி மாநகராட்சிக்கான அறிவிப்பு, அவசர சட்டமாக இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
