அப்பிளாஸ்டிக் அனீமியா (Aplastic anaemia) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச சிறுமிக்கு, பிரதமர் மோடி 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சுமர்சிங் என்பவரின் மகள் லலிதாவுக்கு அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற இரத்த சோகை நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் மகளின் சிகிச்சைக்காக சுமர்சிங் சுமார் 7 லட்சம் ரூபாயை செலவழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகளின் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதால், மேற்கொண்டு செலவழிக்க பணம் இல்லாமல் பிரதமர் மோடியிடம் உதவிக்கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் அலுவலகம் மோடியின் உத்தரவுக்கு ஏற்ப, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து சிறுமியின் சிகிச்சைக்காக 30 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்கு சிறுமியின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.
அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற அரியவகை இரத்த சோகை, என்பது உடலின் ரத்த அணுக்கள் உற்பத்தியை குறைத்து இரத்த சோகையை உருவாக்குவதோடு, தீராத இரத்தபோக்கு மற்றும் தொற்று நோயை உருவாக்கும்.
