திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள் மருத்துவம் பார்த்த நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் தையல் போட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் நடந்த மற்றொரு நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையான மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் திரவத்தை பெண் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் நரம்பு வழியாக உட்செலுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.
மருத்துவரோ, செவிலியரோ அல்லாமல் குளுக்கோஸ் திரவத்தை துப்புரவுத் தொழிலாளி ஏற்றியது பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களன்றி துப்புரவுத் தொழிலாளர்கள் மருத்துவம் பார்ப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பதிலளித்த திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் உமா, கூத்தாநல்லூரில் மருத்துவம் பார்த்தது துப்புரவுப் பணியாளர் அல்ல என்றும் அவர் பல்நோக்கு பணியாளர் என்றார். 50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளில், மருத்துவமனை ஊழியர்களைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். அந்த வகையில் மன்னார்குடியில் சிகிச்சை அளித்தவர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்சி எடுத்த ஊழியர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
