அமெரிக்கா – ஈரான் இடையே நீடிக்கும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்த முறிவால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பகைமை வளர்ந்தது. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் அண்மையில் சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் அதிகரித்தது. பதிலுக்கு அமெரிக்காவும் தாக்குதல் தொடுக்க தயாராகி கடைசி நேரத்தில் தனது முடிவை கைவிட்டது.
இருப்பினும் ஈரானின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது மேலும் சில தடைகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இருநாடுகள் இடையேயான பதற்றம் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் 25 செண்ட் உயர்ந்து, ஒரு பேரல் 65.45 டாலர்களாக உள்ளது. மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் விலையில் 37 செண்ட் அதிகரித்து, ஒரு பேரல் 57.80 டாலர்களாக அதிகரித்து இருக்கிறது.
