அந்தமான்-நிக்கோபாரில் உள்ள 3 தீவுகளின் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அறிவிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். போர்ட்பிளேரில் மூவர்ண தேசியக் கொடியை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஏற்றியதன் 75-ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று மாலை அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், ரோஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனப் பெயர் மாற்றப்படுவதாகக் கூறினார்.நெயில் தீவு, ஷாஹீத் தீவு எனவும் ஹேவ்லாக் தீவு, ஸ்வராஜ் தீவு எனவும் பெயர் மாற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்தமானில் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
போர்ட்பிளேரில் உள்ள செல்லுலார் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்ட அவர், அந்நகரில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயரக் கொடிக் கம்பத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, கார் நிக்கோபார் பகுதியில் பயணம் மேற்கொண்ட பிரதமர், அந்தத் தீவில் உள்ள பிஷப் ஜான் ரிச்சர்ட்சன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, குழந்தைகளுக்கான கல்வி, முதியோர்களுக்கான மருத்துவம், விவசாயிகளுக்கான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கார் நிக்கோபார் மேம்பாட்டில் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக, பிரதமர் சுனாமி நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். சுனாமியில் உயிரிழந்தோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
