முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ். வராஹா என்ற அதிநவீன ரோந்துக் கப்பலை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். எந்த ஒரு அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று அப்போது அவர் சூளுரைத்தார்.

வராஹா கப்பலை, இந்திய கடலோர காவல் படையில் இணைக்கும் நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கடலோர காவல் படை பொது இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது, வராஹா கப்பலை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், புது மங்களூரு துறைமுகம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடற்பரப்பில் வராஹா கப்பல், ரோந்துப் பணியில் ஈடுபடும் என்றார். தீவிரவாத தடுப்பு, கடத்தல் தடுப்பு, சர்வதேச கடல் விதிகள் அமலாக்கச் சவால்களை வராஹா எதிர்கொள்ளும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருடன் சேர்ந்து ராஜ்நாத் சிங் கப்பலை பார்வையிட்டார்.
இந்தியக் கடலோர காவல் படைக்கு, 7 அதிநவீன கப்பல்கள் கட்டுவதென 2015ஆம் ஆண்டில் எல் அண்ட் டீ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி பெறப்பட்டுள்ள நான்காவது கப்பல் வராஹா.
காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டீ கப்பல் கட்டும் தளத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது தான் வராஹா. காக்கும் கடவுளான விஷ்ணுவின் பன்றி அவதாரத்தைக் குறிக்கும் வகையில் இந்தக் கப்பலுக்கு வராஹா என பெயர் சூட்டப்பட்டது. இடம் அறிதல் மற்றும் தொலைதொடர்புக்கான அதிநவீன உபகரணங்கள் வராஹாவில் உள்ளன.
2100 டன் எடை கொண்ட வராஹா, 94.8 மீட்டர் நீளமும், 14.1 மீட்டர் அகலமும் உடையது. 9100 கிலோ வாட் திறன் கொண்ட இரு எஞ்சின்களை உடையது வராஹா.
அதிகபட்சமாக மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வராஹா கப்பல், ஒரு முறை எரிபொருள் நிரப்பப்பட்டால், 9 ஆயிரத்து 260 கிலோ மீட்டர் வரையில் பயணிக்கும் திறன் கொண்ட வராஹாவால், தொடர்ந்து 20 நாட்களுக்கு கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முடியும். 30 எம்.எம். மற்றும் 12.7 எம்.எம். ரக துப்பாக்கிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
இலக்கை குறிவைப்பதற்கும், சரியாக இலக்கை தாக்குவதற்கும் பயன்படும் FCS எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு, அந்த துப்பாக்கிகளில் உள்ளது.
இரவிலும் கண்காணிக்கும் வகையில், இலகு ரக ஹெலிகாப்டர்களையும், 4 அதிவிரைவுப் படகுகளையும் சுமந்து செல்லும் திறன் பெற்றது. கேப்டன் துஷ்யந்த் குமார் தலைமையில், 14 அதிகாரிகள் மற்றும் 89 வீரர்களுடன் இந்த ரோந்துக் கப்பல் பணியைச் செய்ய உள்ளது.
