சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. காலை முதல் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த மழையின் வருகையால் சேலம் மாவட்ட மக்களின் உள்ளங்கள் குளிர்ந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் விராச்சிலை, பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குளிர் காற்றுடன் மிதமான மழை பெய்தது. அரைமணி நேரமாக விடாது பெய்த மழையால் ஓரளவுக்கு குடிநீர் பிரச்சினை தீரும் எனறு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடியுடன் கூடிய கன மழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரியக்குடி, செஞ்சை கழனிவாசல், பர்மா காலனி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மாலையில் மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது.
