அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் குஜராத் அருகே நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மும்பையில் விடிய விடியப் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பலத்த காற்றுடன் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தானே, விலேபார்லி, மேற்கு காந்திவ்லி, சர்ச்கேட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழையைக் கண்ட மக்கள் சாலைகளில் ஆட்டம் போட்டனர்.
காற்றுடன் கூடிய கனமழையால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட சில விமானங்களை தலைநகர் டெல்லியில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இரண்டாவது நாளாக இன்று காலையிலும் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு வாயு என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாயு புயல் நாளை மறுநாள் காலை போர்பந்தருக்கும், மகுவா பகுதிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் என்றும், அப்போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் இருக்குமாறு குஜராத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
